Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, June 5, 2009

0 என் மீது அடிக்கும் மூத்திர நெடி.

இங்கே என் மீதோ,
சாலை ஓரத்தில்
கிடக்கும் பிச்சைக்காரன் மீதோ,
வசதி படைத்த அந்த
கோடீஸ்வரன் மீதோ,
இந்த எழுத்தாளர், அறிவுஜீவி
இவர்கள் மீதோ,
கூட்டம் நடத்தும் அந்த
அரசியல்வாதி மீதோ
இன்னும் யார் யார்
எங்கள் எட்டு கோடி பேர்
எல்லோரின் மீதோ,
எந்த எறிகணையும்,
எந்த வன்கொடுமையும்
நிகழ்ந்துவிடவில்லைதான்......

இருப்பினும்
இந்தியா என்ற தேசத்தானும்,
சிங்களம் என்ற தேசத்தானும்,
சேர்ந்து
காரி உமிழ்ந்து
வழிய விட்ட எச்சிலும்,
அடித்து முடித்த
மூத்திர நெடியும் - நான்
இரவில் புரண்டு புரண்டு படுத்த
எல்லா வேளைகளிலும்
என்னை
எழுப்பிவிட்டிருக்கிறது.

நாளை
எம் புலிகள்
ஈழ தனி தமிழ் நாட்டை
கட்டி எழுப்பி விட்டு
ஈழ தமிழ் வீர வரலாறு
எழுதும் போதும் கூட
என் மீது அந்த
மூத்திர நெடி
அடித்துக்கொண்டுதானிருக்கும்.

Monday, May 25, 2009

0 திரும்பத் திரும்ப எழுதப்படுகிற (தேவை இல்லாத) கவிதை.


என் பெயர் என்ன ?
நான் எங்கே இருக்கிறேன் ?
இது என்ன இடம் ?

நான் உயிருடன்தான் இருக்கிறேனா ?
அல்லது செத்துபோய்விட்டேனா ?

அவர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் ?
எங்கிருந்து வந்ததிந்த குரோதம் ?
இது என்ன ஒரே ரத்தமாக கொப்பளிக்கிறதே ?

நிலை குலைய செய்யும் படி -
தொடர்ந்து அங்கு அழுது கொண்டிருப்பது யார் ?
ஏன் ?

இங்கு,இப்பொழுது
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் ?

இனி, என்ன செய்யப்போகிறேன்

இதெல்லாம் எதற்க்காக ?
ஏன் ?

--------குருநாத் கேடோ ரஞ்சன்.
லயம்-10, ஜூன்-1994 இதழ்.

Tuesday, April 21, 2009

0 From......கடைசி தமிழன் பாரதி


சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ ! - கிளியே
செம்மை மறந்தாரடீ !
- கடைசி தமிழன் பாரதி

Saturday, March 21, 2009

0 நகுலன் கவிதைகள்

அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்

————————–

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

————————–

வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

————————–

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!

————————–

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

————————–

எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

————————–

எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

————————–

Monday, December 29, 2008

2 திருமணம்

தொலை தூர

நகரம் ஒன்றிலிருந்து
அத்தர் போன்ற வாசனை
கசிந்து கொண்டிருக்கிறது.

நீயும்
நானும்
இதுவரை பார்த்திராத ஒருவன்
புலன்களின் இன்பம் பற்றி
சொல்லிப்போகிறான்.

அன்று
புலன்கள் எழுந்து கொண்ட
பொழுதிலிருந்து-நான்
வரைந்து வைத்திருக்கும்
கற்பனைகளை காண்கையில்
அம்மா வந்து
தட்டி எழுப்பினாள்
என்னை.

Sunday, November 16, 2008

0 Poems :: கவிதைகள்

-----எப்போதும்-----

ஆசீஸ் முல்லக் தெருவில்
25 ஆண்டுகளாய் வாழ்ந்த
வயதான தாத்தாவை கொன்ற
கடவுளை
காவேரி டீ ஸ்டால்லில் வைத்து
கையும் களவுமாய் பிடித்தேன்.

எனக்கு
என்று தேதி குறித்திருக்கிறாய் ?
என கேட்டதர்க்கு,
நீ
முன் எப்போதும்
பிறந்ததே இல்லை-என
சொன்னார்.

ஒரு சிகரெட்டை
பற்ற வைத்தவாறே
கடவுளிடம்
சொல்லிவிட்டு வந்தேன்
நான்
இனி எப்போதும்
இறப்பதும் இல்லை என்று..